யாழ். இந்துவின் சிவலிங்கம் அகற்றப்பட்ட விவகாரம்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை, பூரண விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இலங்கை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தை மையமாகக் கொண்டு குறித்த வழக்கு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சம்பவத்தின் பின்னணி
2018 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வளாகத்தினுள் புதிதாக சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

குறித்த சிவலிங்கம் கல்லூரி அதிபரால் அகற்றப்பட்டதுடன் அதனை வேறொரு இடத்தில் மீண்டும் நிறுவுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் செயற்பாடு தமது மத மற்றும் அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறி, மூன்று பழைய மாணவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரால் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை (23.01.2026) இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு
நீதிபதிகள் குழாம் இவ்வழக்கை பிரதம நீதியரசர் பத்மன் சூரசேன , நீதியரசர் அச்சல வெங்கப்புலி மற்றும் நீதியரசர் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் ஆராய்ந்தது.

மனுதாரர்கள் முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், இந்த வழக்கை அடிப்படை உரிமை மீறல் மனுவாக முழுமையான விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியது.
மனுதாரர்கள் இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரைகள் மீறப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்களுக்கான விசாரணை திகதியாக எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் திகதி (03.07.2026) குறிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் இரு தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டு, கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கை சரியா அல்லது தவறா என்பது குறித்து உயர்நீதிமன்றம் தீர்க்கமான முடிவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |