இருளில் மூழ்கடிக்கப்பட்ட யாழ்.வல்லைவெளி - பிரதேச சபையின் செயற்பாட்டால் மக்கள் விசனம்!
யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் சூரிய மின்கலங்கள் அனைத்தையும் அகற்றி ஏனைய பகுதிகளில் நாட்டுவதற்கு தீர்மானித்துள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்துள்ளார்.
மக்களுக்காக நிறுவப்பட்ட குறித்த மின் விளக்குகளை பாராமரிக்க வேண்டிய பொறுப்பு பிரதேசசபைக்கு இருக்கும் நிலையில், பொதுமக்களே அதனை பாதுகாக்க வேண்டும் என குற்றம் சாட்டுகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
களவாடப்பட்ட சூரிய கலங்கள்

யாழ்ப்பாணம் வல்லைவெளிப் பகுதியில் பொதுமக்களின் நன்மை கருதி அமைக்கப்பட்ட இரு சூரிய கலங்கள் களவாடப்பட்ட நிலையில், அவற்றின் சில பாகங்கள் மாத்திரம் பற்றைக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் பிரதேச சபையினால் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த களவு சம்பவம் தொடர்பில் வல்லை வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள், பாதுகாப்பு தரப்பினர், காவல்துறையினர் கூட கண்காணித்து அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என பிரதேச சபைகள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றன.
இந்த விடயம் தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளா் தியாகராஜா நிரோஷிடம் ஊடகவியலாளர்கள் வினவியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர்,
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் ஒரு மின்விளக்கு 2 இலட்சம் ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படுவதாகவும் அதனை அடியோடு வெட்டி எடுத்துச் செல்வது வேதனையான விடயம் எனவும் கூறியுள்ளார்.
களவு கொள்ளை அதிகரிக்கும் வாய்ப்பு

இதனை பொதுமக்கள் பாதுகாக்க தவறுகின்றமையால் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சகல சூரிய மின்கலங்களையும் அகற்றி, வேறு, தேவையான இடங்களுக்கு பொருத்த தீர்மானித்துள்ளாகவும் கூறியுள்ளார்.
வல்லவெளிப் பகுதியில் களவு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், மின் விளக்குகள் அகற்றப்படும் பட்சத்தில் மேலும் குற்றச் செயல்கள் அதிகரிக்கலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
பொதுமக்களுக்காக நிறுவப்பட்ட குறித்த மின் விளக்குகளை, பாராமரிக்க வேண்டிய பொறுப்பும் பிரதேசசபைக்கு இருக்கும் நிலையில், பொதுமக்கள் மீது குற்றம் சாட்டுகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.