நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சும், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட செயல் திட்டங்களுக்கான பணியகமும் இணைந்து நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு துறையில் செயற்படுத்தக்கூடிய விசேட திட்டங்கள் தொடர்பில் வியூகங்கள் அமைக்கும் ஆய்வுக்கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது கொழும்பில் ஹில்டன் விருந்தகத்தில் இன்று (23.11.2023) இடம்பெற்றது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட செயல் திட்டங்களுக்கான பணியகத்தின் இலங்கை பணிப்பாளர் சார்ள்ஸ் கலந்துக் கொண்டார்.
ஐ.நா சபையின் செயல் திட்டம்
அத்தோடு, அமைச்சின் செயலாளர் வருண சமரதிவாகர, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, அமைச்சின் அதிகாரிகள், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட செயல் திட்டங்களுக்கான பணியகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான ஏற்பாடு மற்றும் பெருந்தோட்டத்துறையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதற்காக சர்வதேச நாடுகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட செயல் திட்டங்களுக்கான பணியகம் ஆகியவற்றிடம் இருந்து கிடைக்கப்பெறும் ஒத்துழைப்பு, உதவித் திட்டங்கள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்துடன், பெருந்தோட்டத்துறையில் உள்ள குடிநீர் உற்பத்தியாகும் பகுதிகளை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டம், மக்களுக்கு தடையின்றி, சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் கருத்தாடல் இடம்பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
|