போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதில் புதிய சிக்கல் - நீதிச்சேவை ஆணைக்குழு
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்விற்காக பரிந்துரைப்பதில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நீதிச்சேவை ஆணைக்குழு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
நேற்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற அதிகாரிகளுக்கும் இந்த சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்விற்காக சிறைச்சாலைகளுக்கு அனுப்பியமையினால் சிறைச்சாலைகள் மற்றும் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையங்களில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அண்மையில் நீதியமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
முன்மொழிவுகள்

அகுனகொலபலஸ்ஸ புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்படக்கூடியவர்களின் எண்ணிக்கை 75 ஆக இருந்தாலும், தற்போது 140 பேர் உள்ளதாகவும், மஹர சிறைச்சாலை புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்படக்கூடியவர்களின் எண்ணிக்கை 80 ஆக இருந்த போதிலும், 204 பேர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தலைமையகம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள வசதிகள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கைதிகள் தொடர்ந்தும் பரிந்துரைக்கப்படுவதால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்காக எடுக்கப்படக்கூடிய பல நடவடிக்கைகள் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்ததுடன், அந்த முன்மொழிவுகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு நீதிச்சேவை ஆணைக்குழு புதிய சுற்றறிக்கை மூலம் அனைத்து நீதிமன்றங்களுக்கும் அறிவித்துள்ளது.
சமூக புனர்வாழ்வு நிலையம்

இதன்படி, போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கும் போது, சிறைச்சாலை அத்தியட்சகரிடம் அறிக்கை பெற்று, அனைத்து வழக்குகளின் முடிவிலும் கைதிகளை அனுப்பிவைக்க வேண்டும் அல்லது புனர்வாழ்வுக்கு அனுப்ப வேண்டும்.
மேலும், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறைச்சாலை புனர்வாழ்வுக்கு அனுப்புவதற்கு பதிலாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பணியகம், அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை அல்லது சமூக புனர்வாழ்வு நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டுமென நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.