விஜய் தலைமையிலான த.வெ.கவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையடி!
கரூரில் கடந்த 27 ஆம் திகதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த பேரவல சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
கூட்டங்களுக்கு கட்டுப்பாடு கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் இன்று விசாரணை நடத்தியுள்ளார்.
விஜயின் தலைமைத்துவம்
அதன்போது அவர், கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்றும், தவெக தலைவர் விஜயிடம் தலைமைத்துவ பண்பே இல்லை என்றும் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
“சம்பவம் நடந்தவுடன் ஏற்பாட்டாளர்களும் தலைவரும் தொண்டர்களையும் பின்தொடர்பவர்களையும் கைவிட்டு அங்கிருந்து மறைந்துவிட்டனர். அனைத்துக் கட்சிகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோதும், நிகழ்ச்சி நடத்தியவர்கள் மொத்தமாக வெளியேறிச் சென்றனர்.
இது கட்டுப்படுத்தப்படாத கலவரம்போல நடந்துள்ளது” என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
விஜயின் பிரச்சார பேருந்து
மேலும், இந்தச் சம்பவத்துக்கு காரணமான விஜயின் பிரச்சார பேருந்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை என்று காவல்துறையிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இருசக்கர வாகனங்கள் சிக்கிய நிலையில் பேருந்து சென்ற காணொளி உள்ளதாகவும், சாரதி வெளியே எட்டிப் பார்த்தும் வாகனத்தை நிறுத்தாதது அதிர்ச்சியாக உள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அரசு கருணை காட்டுகிறதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பரப்புரையால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டீர்களா, ஏன் இத்தனை தாமதம் எனவும் நீதிபதி தொடர்ந்து அரசுத் தரப்பை வினவியுள்ளார்.
ஆதவ் அர்ஜூனாவின் பதிவு
“சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்; நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது” என்று எச்சரித்த நீதிபதி, காணொளி காட்சிகளைப் பார்ப்பது வேதனையளிக்கிறது என்றும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, த.வெ.க நிர்வாகிகள் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கட்சி நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் மதுரை கிளையில் விசாரணையில் உள்ளன.
இதன்படி, ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தளத்தில் “புரட்சியை ஏற்படுத்த வேண்டும்” என பதிவிட்டதை கண்டித்த உயர்நீதிமன்றம், அதன் பின்புலத்தை காவல்துறை விசாரித்து தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் விசாரித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்க வேண்டுமா எனவும் அரசு தரப்பிடம் நீதிபதி கடுமையான கேள்விகளை தொடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
