கனடாவை தாண்டி பிரிட்டனிலும் அட்டகாசம் புரியும் காலிஸ்தானியர்கள் : தொடரும் பதற்ற நிலை
கனடாவில் ஆரம்பித்த காலிஸ்தான் அமைப்பினரின் பிரச்சினை இன்று பிரிட்டனிலும் தனது கைவரிசையை காட்டியுள்ளது.
ஸ்கொட்லாந்தில் உள்ள குருத்வாராவிற்கு சென்ற பிரிட்டன் இந்தியத் தூதுவர் விக்ரம் துரைசாமியை உள்ளே நுழைய விடாமல் அங்கிருந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
காலிஸ்தான் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வருகின்றது.
இது குறித்த காணொளி
இந்நிலையில், இந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, தவிரவும் இது குறித்த காணொளி ஒன்றும் இணையத்தில் வெகுவாக பரவி மக்களை பீதியடைய வைத்துள்ளது.
வாகனத்தரிப்பிடம் வரை வந்த காலிஸ்தானியர்கள் தூதுவரை தடுத்ததும், காருக்குள் இருந்த விக்ரம் துரைசாமியை காரை திறந்து வெளியில் இழுக்க முயல்வதும் காணொளியில் தெளிவாக பதிவாகியிருந்தது.
கார் உட்புறமாக பூட்டப்பட்டிருந்தால் அதிஷ்டவசமாக அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது, இல்லையென்றால் அந்த இடத்தில் மோசமான சம்பவம் நடந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து அந்த கார் குருத்வரா செல்லாமல் அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டது.
இந்த சம்பவத்திற்கும் குருத்வாரா சங்கத்தினருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று குருத்வாரா சங்கத்தினர் கூறியுள்ளனர், விக்ரம் துரைசாமியை குருத்வாரா வரும்படி அளித்ததே அந்த சங்கத்தினர் தான் என்றும் கூறுகின்றனர்.
அதற்கு வலுச்சேர்ப்பது போல் காலிஸ்தான் ஆதரவாளர்கள் குருத்வாரா ஊழியர்களை மிரட்டுவதையும் இன்னொரு காணொளியில் காண முடிகிறது.
இந்த பிரச்சினை தொடர்பாக இந்தியா இதுவரையில் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.
இந்து கோயில்கள்
இது இந்தியத் தூதரின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை என்பதால் இது தொடர்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், வெளிநாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்குத் தடை இல்லை.
இதன் காரணமாகவே அவர்கள் இதுபோல வெளிப்படையாக இயங்கி வருகின்றனர்.
பிரிட்டனில் கடந்த காலங்களிலும் இந்து கோயில்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் அவமதிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்தியத் தூதர் ஒருவரையே காலிஸ்தான் பயங்கரவாதிகள் வழிமறித்துள்ளனர் என்பதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது என அனைவரும் கூறி வருகின்றனர்