அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்ய அநுரவின் அதிரடி நகர்வு!
நாட்டில் எந்தவொரு சூழ்நிலையிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கோ மின்சாரத்தைத் துண்டிப்பதற்கோ அல்லது விவசாய உரம் மற்றும் மருந்து வகைகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் உருவாவதற்கோ இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இதனை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தற்போதைய எண்ணெய் விலை உயர்வுப் போக்கு மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள வெளிநாட்டு அந்நியச் செலாவணி நெருக்கடி குறித்து ஆழமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இறக்குமதிச் செலவு
இது தொடர்பில் மேலும் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த ஏப்ரல் மாதமாகும் போது நாட்டின் இறக்குமதிச் செலவு இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள டொலர் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கில், மோட்டார் வாகன இறக்குமதிக்குக் கூடுதல் கட்டணம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் எரிசக்தி பற்றாக்குறையோ அல்லது உரத் தட்டுப்பாடோ ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த தேசத்தின் உயிர்வாழ்வையும் கடுமையான ஆபத்தில் ஆழ்த்தும் என்பதால் அத்தகைய குழப்பநிலை உருவாகத் தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சந்தையில் பொருட்களின் விலைகள் மேலும் உயர்ந்தாலும் பற்றாக்குறை ஏதுமின்றிச் சம்பந்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தொடர்ந்து வழங்குவதற்கு அரசாங்கம் தேவையான ஏற்பாடுகளைச் செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் இறக்குமதிக்காகச் செலவிடப்படும் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காக இன்னும் சில சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது அமைச்சரவைக்குத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |