யாழ். பல்கலை மாணவனுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை: நிர்வாகம் எடுத்த தீர்மானம்
யாழ். பல்கலையின் 4ஆம் வருட சட்டத்துறை மாணவனுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை மீள பெறப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் மாணவனுக்கு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நடைபெற்ற மூன்று வெவ்வேறு விடயங்களில் 09 மாணவர்களுக்கு வகுப்புத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறித்த வகுப்புத்தடை குறித்து, மாணவர் ஒன்றியத்தின் செயலாளராக அண்மைக்காலம் வரை செயலாற்றிய சட்ட பீட மாணவனான சி.சிவகஜனால் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டது.
பேராசிரியர் ரகுராம்
அதனை அடுத்து தன்மீது பாரதூரமான அவதூறை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு சிவகஜன் செவ்வி வழங்கினார் என பேராசிரியர் ரகுராம் துணைவேந்தரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
பேராசிரியர் எஸ்.ரகுராம் கலைப்பீடாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த மறுநாளே குறித்த முறைப்பாடு வழங்கப்பட்டது.
இந்நிலையில் முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி பல்கலைக்கழகத் துணைவேந்தரால் சட்டத்துறை மாணவன் சிவகஜனுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டது.
மாணவன் மீதான வகுப்புத்தடை
இந்த வகுப்புத் தடை யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீடாதி எஸ்.ரகுராம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய விதிக்கப்பட்டுள்ளது என்று துணைவேந்தரால் மாணவனுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வகுப்புத் தடையைச் சவாலுக்குட்படுத்தி யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் சிறிசற்குணராஜா, கலை பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு சட்டத்துறை மாணவன் சிவகஜனால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலையே மாணவன் மீதான வகுப்புத்தடை நீக்கப்பட்டுள்ளதாக மாணவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வகுப்புத்தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும், சட்ட விதிமுறைகளை மீறி மாணவனுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராகவும் , இழப்பீடு கோரியும் வழக்கினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
