பதவிகளுக்காக கொள்கைகளை காட்டிக்கொடுக்கமாட்டேன்!
இப்போதும் பிரதமராக பதவியேற்க நான் தயார் ஆனால் பதவிகளுக்காக ஒருபோதும் கொள்கைகளை காட்டிக்கொடுக்கமாட்டேன் என என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(25) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
"நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு நேரடியான தீர்வுகளை நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம். எங்களிடம் அதேற்கேற்ற திறமையான மற்றும் தகைமையுள்ள குழு உள்ளது.
பொருளாதார மறுமலர்ச்சியை நடைமுறைப்படுத்துவதுடன், இந்நாட்டின் பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக இருக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
எனவே, அரசியல் சீர்திருத்த நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்நாட்டில் பொருளாதார சீர்திருத்தத்திற்கான அணுகல் எமக்கு தேவையாகவுள்ளது.
மக்கள் அபிப்பிராயத்தின் பிரகாரம் போராட்டத்திற்கு துரோகம் செய்யாமல் அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கிய வன்னம் சிறந்த கொள்கைகளை கடைபிடித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்து, இந்நாட்டு மக்களின் வாழ்வுரிமையை, அடிப்படை மனித உரிமைகளை, பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிறைவேற்ற நாம் தயாராக உள்ளோம்.
அதற்கேற்ற மூன்று நபர்களைக் கொண்ட குழுவும், தேவையான பின்னணி பலத்தை வழங்கும் புலமைத்துவ குழுவும் இணைந்து செயல்படுகின்றன. குறிப்பாக,நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முற்போக்கான வேலைத்திட்டத்தின் தெளிவை முன்வைக்க நாங்கள் தயாராக உள்ளோம்", எனக் குறிப்பிட்டார்.
