பல்லாயிரக்கணக்கான மக்களை வீதியில் இறக்கிப் போராடுவோம் - தேர்தல் பயத்தில் திணறும் அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையை தீர்த்து ஸ்மிரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்றால் முதலில் நிலையான அரசாங்கம் அமைய வேண்டும். அவ்வாறு அமைந்தால் மட்டுமே பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த நிலையான ஆட்சி அமைவதற்கு தேர்தல் அவசியம். ஆனால்,தேர்தலில் தோல்வியடைந்துவிடுவோம் எனப் பயந்து அரசாங்கம் தேர்தலை ஒத்திப்போட முயற்சி செய்கின்றது எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் ஒத்திப்போட்டால் அதற்கு எதிராக பெருமளவு மக்களை வீதியில் இறக்கிப் போராடுவோம் என்று எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டாக எச்சரிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்கள்,
“நாட்டை மேலும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளுவதற்கே அரசாங்கம் முயக்கின்றது. மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை.
பொருளாதாரப் பின்னடைவு

மின் கட்டணத்தை மேலும் அதிகரிப்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. இதனால் பல தொழிற்சாலைகள் மூடப்படும். பொருளாதாரம் மேலும் பின்னடைவைச் சந்திக்கும்.
இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசாங்கம் நிச்சயம் படுதோல்வியைச் சந்திக்கும். நிலையான அரசாங்கம் இருந்தால் மாத்திரமே இந்தப் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று சர்வதேச நாடுகள் கூறுகின்றன.
எச்சரிக்கை

ஆனால் தாம் தோற்றுவிடுவோம் எனப் பயந்து அரசாங்கம் தேர்தலை ஒத்திப்போட்டால் இலட்சக்கணக்கில் மக்களை வீதிக்கு இறக்கிப் போராடுவோம்” எனவும் அவர்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.