உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரலில் அறிவியுங்கள் : வேண்டுகோள் விடும் முன்னாள் எம்.பி
அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) நேற்று (23.12.2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘‘தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி ஊடகங்களுக்கு அறிவித்திருக்கிறார்.
அமைச்சரவை
சட்டவாக்கம் தொடர்பில் தெளிவில்லாமலேயே ஜனாதிபதி இவ்வாறான கருத்தை முன்வைத்திருக்கிறார். தற்போதுவரையில் கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச்செய்வதற்காக நாடாளுமன்றத்தில் சட்டமொன்றை நிறைவேற்றுவதற்காக அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்தின் முதலாவது சபைக் கூட்டம் ஜனவரி 21ஆம் திகதியே இடம்பெறும்.21ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக மேலும் இருவார காலம் வழங்கப்படவேண்டும்.
அவ்வாறெனில், பெப்ரவரி 05ஆம் திகதியே இந்தச் சட்டமூலத்துக்கு அனுமதி பெற்று முழுமை செய்ய முடியும். அதனை முறையாக ஒழுங்குபடுத்தி சபாநாயகரிடம் கையொப்பம் பெற இரு நாட்களாவது ஆகும்.
தேர்தல் ஆணைக்குழு
அதன் பின்னரே அது சட்டமாக நடைமுறைபடுத்தப்படும் அவ்வாறெனில், பெப்ரவரி 08 ஆம் திகதியே தேர்தல் ஆணைக்குழு அவசரமாக ஒன்றுகூடி தேர்தல் அறிவிப்புக்கான தீர்மானங்களை எடுக்கும்.
09ஆம் திகதி தேர்தலை அறிவித்தால் பெப்ரவரி 23 – 26ஆம் திகதிவரை வேட்புமனுக்கள் பொறுப்பேற்கப்படும். உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் 05 07 வாரங்களில் தேர்தல் இடம்பெற வேண்டும்.
அவ்வாறெனில், ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி தேர்தல் இடம்பெற வேண்டும். எனவே, இன்றே (நேற்று 23.12.2024) சட்டமூலத்தை சமர்ப்பித்து நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுத்தால் மாத்திரமே ஏப்ரல் 05ஆம் திகதி தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |