ஸ்ரீலங்காவின் அடுத்த பிரதமராகும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி!
ஸ்ரீலங்காவின் அடுத்த பிரதமராவதற்கான முயற்சியில் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் தற்போதைய அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியைக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தம்வசப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோட்டா-மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் அதிருப்தியிலுள்ள சுமார் 40 உறுப்பினர்கள் தற்போது மைத்திரியுடன் பேச்சு நடத்தியிருப்பதாகவே சுதந்திரக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்த அரசாங்கம் மீதான எதிர்ப்பலைகள் தற்போது அதிகரித்து வருகின்றன.
இதே நிலைமை தொடர்ந்து செல்லும் பட்சத்தில் 2023 ஆம் ஆண்டு ஜுன் மாதத்திற்குப் பின் அரசாங்கம் நெருக்கடியை சந்தித்து மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும் இழக்கலாம் என்கிற அச்சம் காணப்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தவுள்ள மைத்திரி, நாடாளுமன்றத்தில் தனக்கான மூன்றிலிரண்டு பெரும்பான்மையை அமைத்து பிரதமராவதற்கான முயற்சி அல்லது 2024இல் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் பிரதமராவதற்காக தனது அதிகாரத்தைப் பலப்படுத்திக் கொள்வற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவே கூறப்படுகின்றது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மிகப்பெரிய எதிரணி கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான பேச்சுக்களும் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவும், அவரது புதல்வருமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவும், ரணில் விக்கிரமசிங்கவை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.