யாழில் அதிரடியாக பதவி நீக்கப்பட்ட பெண் மேலதிக நீதிவான்!
யாழ் (Jaffna) மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் பதவி விலகியுள்ளார்.
மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சுபறாஜினி ஜெகநாதனே இவ்வாறு பதவி விலகியுள்ளார்.
இந்த விடயத்தை மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் என்.பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
நீதிச்சேவை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சுபறாஜினி ஜெகநாதனுக்கெதிராக மல்லாகம் நீதிச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்திருந்த நிலையில், இது தொடர்பான விசாரணை சமீப காலமாக நடைபெற்று வந்தது.
பதவி விலகல்
இந்தநிலையில் கடந்த (23.09.2025) அன்று நீதிச்சேவை ஆணைக்குழுவில் இது குறித்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சுபறாஜினி ஜெகநாதன், நீதிவான் ஒருவருக்குரிய கண்ணியமான நடத்தையை வெளிப்படுத்தியிருக்காத குற்றச்சாட்டுக்கு ஏதுவான சான்றுகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சுபறாஜினி ஜெகநாதன் தனது பதவி விலகல் கடிதத்தினை உடனடியாக நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் கையளித்ததன் அடிப்படையில், நீதிச்சேவை ஆணைக்குழுவினால் (23.09.2025) இலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
சமாதான அறை
அத்தோடு, இன்றைய தினம் (24.09.2025) நீதிச்சேவை ஆணைக்குழுவின் சார்பில் மேல்நீதிமன்ற நீதிபதி ஒருவர் மல்லாகம் நீதிமன்றத்திற்கு காலை வேளை பிரசன்னமாகி இருந்தார்.
குறித்த நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதவானின் சமாதான அறை மற்றும் அதில் உள்ள பொருட்களை பொறுப்பேற்று நீதிமன்ற பதிவாளரிடம் கையளித்திருந்தார்.
இதையடுத்து, சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடிய மேல் நீதிமன்ற நீதிபதி, புதிய நீதவான் ஒருவர் வெகுவிரைவில் நியமிக்கப்படுவார் என சட்டத்தரணிகளுக்கு உத்தரவாதம் வழங்கியிருந்தார்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
