அபிவிருத்தி என்ற பெயரில் ஏமாற்றப்பட்ட மன்னார் மக்கள் : அம்பலமான உண்மைகள்
மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 30 காற்றாலை மின் கோபுரங்களினால் அப்பகுதி மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த நிலையில் மன்னாரில் மேலும் பல காற்றாலை மின்கோபுரங்களை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இதற்கு எதிராக தொடர்ச்சியாக 50 நாட்களுக்கு மேலாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
காற்றாலை ஏற்கனவே அமைக்கப்பட்ட இடங்களில் கரைவலை மீன்பிடி பாதிக்கப்பட்டுள்ளது, எமது நிலத்தடி நீரில் மாற்றங்கள் தென்படுகின்றன, காற்றாலை அமைக்கப்பட்ட இடங்களில் இருக்கும் பனை மரங்கள் கருகுகின்றன, மழை காலத்தில் வெள்ளநீர் வடிந்தோடி கடலைச் சேருவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்று அப்பகுதி மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
2020 டிசம்பர் மாதத்திற்கு பிறகு மன்னார் தீவு வெள்ளப்பெருக்கால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதாவது 30 காற்றாலைகள் அமைக்கப்பட்ட பிறகு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காற்றாலைக்காக அமைக்கப்பட்டுள்ள அடித்தளத்தினால் வெள்ளநீர் வெளியேறும் பகுதிகள் அடைக்கப்பட்டுள்ளதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற அச்சுறுத்தலே மக்கள காற்றாலை திட்டத்தை எதிர்ப்பதற்கான முக்கிய காரணமாகும்.
அத்துடன் காற்றாலை திட்டத்தினால் அப்பகுதி மக்கள் நன்மையடைவார்கள் என்ற பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்பட்டதுடன் அபிவிருத்தி என்ற பெயரில் மன்னார் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
50 வருட காலமாக இப்பகுதியில் கடற்றொழிலை மேற்கொண்ட மக்கள் இன்று அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர். அதாவது காற்றாலையின் நிழலினால் கரையோர மீன்பிடி முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்த மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் உண்மைகள் பேசட்டும் நிகழ்ச்சியில் காண்க........
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
