மீண்டும் முள்ளிவாய்க்கால் தூபி அமைப்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைத் தூபி அமைத்தல் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் இன்றைய சபை அமர்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இதன்போது கடந்த 8ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.மாநகர சபை மூன்று கண்டன தீர்மானத்தை நிறைவேற்றியது.
நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமையை கண்டித்து சபை அமர்பு ஐந்து நிமிடங்கள் ஒத்திவைத்தல், யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் உள்நுழைந்தமையை கண்டித்தல் மற்றும் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைத் தூபி அமைத்தல் ஆகிய மூன்று தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முடிவினை முன்னாள் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்திருந்தார். அவர் தொடர்ந்து தெரி
விக்கையில், இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து உரிமைக்காக போராடிய அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஒரு பொதுவான நினைவு தூபி அமைக்கப்பட வேண்டும்.
இதுவே எமது கட்சியின் நிலைப்பாடு. அந்த வகையில் யாழ்.பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் படுகொலை மற்றும் அவருக்கு நீீதி கேட்டு போராடிய விமலேந்திரன் உள்ளிட்ட மாணவர்களும் இதில் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் தமது கட்சியின் கருத்தினை பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து சபையின் ஏனைய உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவித்ததை அடுத்து முதல்வர் சபை அமர்வை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐந்து நிமிடத்தின் பின்னர் ஏனைய விடையங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டு தற்போதும் நடைபெற்று வருகின்றது.
Tags : #Jaffna #Meetings #University of Jaffna #Mullivaikkal Memorial
