கொழும்பில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு : பிரான்ஸில் உள்ள “குடு அஞ்சு”வின் கை வரிசை
கொழும்பு கொட்டஹேன காவல் பிரிவுக்குட்பட்ட மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் இன்று பிற்பகல் (10) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை, தற்போது பிரான்சில் உள்ள “குடு அஞ்சு” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் நடத்தியதாக காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் முகமது அஸ்மின் மொஹிதீன் என்ற 54 வயது நபர் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு
கொழும்பு 10, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள ஒரு கட்டிடப் பொருட்கள் கடையின் உரிமையாளரை குறிவைத்து இன்று பிற்பகல் சுமார் 1.20 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
“கஞ்சிபானி இம்ரான்” நெருங்கிய உறவினர்
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் பின்னர் உயிரிழந்தார். இறந்தவர் “கஞ்சிபானி இம்ரான்” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரின் நெருங்கிய உறவினர் என்று காவல்துறை தெரிவித்தது.

இரத்மலானை பகுதியில் “குடு அஞ்சு” என்பவரின் நெருங்கிய கூட்டாளி ஒருவர் சமீபத்தில் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.
அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவிலும் இந்தத் துப்பாக்கிச் சூடு பதிவாகியுள்ளது.
கொழும்பு மாவட்டப் பொறுப்புடைய பிரதி காவல்துறை மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் தலைமையிலும், கொழும்பு மத்திய பிரிவு பொறுப்புடைய காவல்துறை சிரேஷ்ட கண்காணிப்பாளரான மகேஷ் குமாரசிங்கவின் மேற்பார்வையிலும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |