நாமல் ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல்! தாய், தந்தை வைத்தியசாலையில்
புதிய இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் இன்று அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளும் சந்தேகநபரின் சட்டத்தரணிகளும் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இரண்டாம் இணைப்பு
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளினால், சிறைச்சாலை பேருந்தில் இன்று முற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளார்.
க்ரிஷ் நிறுவன கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளில் அவர் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.



முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் உள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

நாமல் ராஜபக்சவின் வழக்கு இன்று (13) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான வானூர்தி கொள்வனவுடன் தொடர்புடைய எயார்பஸ் ஒப்பந்த்தம் மற்றும் க்ரிஷ் ஊழல் வழக்கு ஆகிய இரு விசாரணைக்கு அமைய இன்று அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
குறித்த வழக்கு கடந்த 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |