மன உளைச்சலால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற ஞானசார தேரர் - வெளியாகிய தகவல்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாகவும், விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாகத் தெரிவித்ததாகவும், அவரை விடுவிப்பதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்காக முன்னெடுத்து வரும் முயற்சிகள் தொடர்பில் இடம்பெற்ற நேர்காணலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை காரணமாக உணர்வுபூர்வமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட ஆனந்தசிறி தேரர், அவர் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணத்தை வெளிப்படுத்தியதாகக் கூறினார்.
ஞானசார தேரரின் மனநிலை
“அவரிடம் விஷப் போத்தல் ஒன்று இருந்தது. அதனை அருந்தி இறந்துவிடப் போவதாக அவர் கூறினார்” என ஆனந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.

தாம் தலையிட்டு ஞானசார தேரருக்கு அறிவுரை கூறி, அந்த எண்ணத்தைக் கைவிடச் செய்ததாகவும், பின்னர் அந்த விஷப் போத்தல் தூக்கி எறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் இடம்பெற்ற காலப்பகுதியிலிருந்து தமக்கும் ஞானசார தேரருக்கும் இடையில் கடுமையான கருத்து முரண்பாடுகள் நிலவியதாகவும் ஆனந்தசிறி தேரர் இதன்போது வெளிப்படுத்தினார்.
எனினும், ஞானசார தேரரின் மனநிலை மற்றும் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்து அறிந்த பின்னர், அவருக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்ததாக அவர் கூறினார்.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மன்னிப்பு வழங்க வேண்டும் எனக் கோரி, கையெழுத்துச் சேகரிக்கும் பிரசாரத்தை ஆனந்தசிறி தேரர் தற்போது முன்னெடுத்து வருகிறார்.
இந்தப் பிரசாரத்தின் ஊடாக இதுவரை 225,000க்கும் அதிகமான கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், பிரசாரத்தைக் கைவிடுமாறு தமக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.
மேலும், பிரசாரத்தை நிறுத்துமாறு தமக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும், அதற்குப் பதிலாக நிதி உதவி வழங்க முன்வந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எனினும், உரிய அதிகாரிகளிடம் மனுவைச் சமர்ப்பிக்கும் வரை பிரசாரத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாகவும் ஆனந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |