யோஷித - கரன்னாகொட மீதான ஊழல் வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அதன்படி இம்மாதம் 29ஆம் திகதி பிரதிவாதிகளுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 2007 ஜூன் 8ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், யோஷித ராஜபக்சவை பிரித்தானியாவில் உள்ள ரோயல் கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற இளம் அதிகாரிகளுக்கான பயிற்சி நெறியில் பங்கேற்கச் செய்வதற்கு முறையற்ற வகையில் ஏற்பாடுகளைச் செய்ததன் மூலம் அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக வசந்த கரன்னாகொட மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் முறையற்ற அனுகூலத்தைப் பெற்றதாக யோஷித ராஜபக்ச மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இருவருக்கும் எதிராக மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகளை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச, அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பில் சற்று முன்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச இன்று (13) நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முறையான கல்வித் தகுதிகள் இன்றி கடற்படை அதிகாரியாக நியமிக்கப்பட்டு பிரித்தானியாவில் பயிற்சிப் பாடநெறி ஒன்றில் பங்கேற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக யோஷித ராஜபக்ச மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு, இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அவர் அங்கு முன்னிலையாகவுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு
இதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் யோஷித ராஜபக்ச கடந்த ஜூன் மாதம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |