இனப்படுகொலையின் உச்சக்கட்டமே முள்ளிவாய்க்கால்: இலங்கை திருச்சபையின் குருமுதல்வர் விசனம்
''முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை என்று தனியாக சொல்லிவிட முடியாது இனப்படுகொலையின் உச்சக்கட்டம்தான்'' அது என இலங்கை திருச்சபையின் குருமுதல்வர் அருட்பணி எஸ்.டி.பி செல்வன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ” இலங்கையில் இதற்கு முன்பிருந்தே 1956, 1958, 1977, 1983 ஆகிய ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். இதனை இறந்தார்கள் என்று சொல்ல முடியாது. கொல்லப்பட்டார்கள், அழிக்கப்பட்டார்கள் என்றே சொல்லலாம்.
திட்டமிட்ட ரீதியிலே அவர்களுடைய வாழ்விடங்கள் அழிக்கப்பட்டன, உறவுகள் அழிக்கப்பட்டார்கள். இந்தப் பின்னணியிலே தான் முள்ளிவாய்க்காலின் உச்சக்கட்டத்தைப் பார்க்கின்றோம்.
இலங்கை அரசாங்கம் எற்றுக்கொள்கின்றதோ இல்லையோ முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலைதான். அதுமட்டுமல்ல இதனை உலக அடிப்படையிலும் சில நாடுகள் ஏற்றுக்கொள்கின்றன சில நாடுகள் ஏற்றுக்கொள்ளவதில்லை அது அவர்களுடைய நிகழ்ச்சி நிரல்.
ஆகவே எங்களுடைய நிகழ்ச்சி நிரல் என்னவென்றால் எங்களுடைய மக்கள் இயல்பாக சுதந்திரத்தோடு வாழ வேண்டும்.
அன்று முள்ளிவாய்க்கால், இன்று காசா. யாருக்கு யாரிலே விருப்பம். ஒருவருக்கும் ஒருவரிலும் விருபபம் இல்லை. அமெரிக்கா எங்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையிலே கதைக்கின்றது என்றால் எங்களுடைய விருப்பத்தில் அல்ல. இதைப் பாவித்து என்ன அடையப்போகின்றது என்பது அங்கிருக்கின்ற அடிப்படை.
வடக்கு கிழக்கில் ஒரு இனப்படுகொலையை அரங்கேற்றுகின்ற உச்சக்கட்டத்திலே எந்தெந்த நாடுகள் சண்டை போட்டுக்கொண்டிருந்தனவோ அந்த நாடுகளை எல்லாம் ஒன்றாக்கி அவை எல்லாம் இங்கே ஒரு இன அழிப்பை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசிற்கு உதவி செய்தன.“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |