சர்வதேசம் தலையிட தேவையில்லை - அடம்பிடிக்கும் அமைச்சர் நலிந்த
ஜெனிவா விவகாரத்தை வைத்து ஒரு போதும் அரசியல் செய்யப்போவதில்லை என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும், அங்கு மேற்கொள்ளப்படும் தீர்மானங்களும் அரசியல் இருப்புக்காகவே கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
ஜெனிவா தீர்மானத்துடன் உடன்படவில்லை
அவ்வாறான செயற்பாடுகளில் நாங்கள் ஒருபோதும் ஈடுபடப்போவதில்லை. அதுபோல், அத்தகைய செயற்பாடுகள் ஈடுபடுவதற்கு எவரையும் அனுமதிக்கவும் மாட்டோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் தெளிவுபடுத்திவிட்டார்.
ஜெனிவா தீர்மானத்துடன் நாங்கள் உடன்படவில்லை என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையின் சுயாதீனம்
அந்த நிலைப்பாட்டில் நாங்கள் எப்போதும் மாற்றங்களைச் செய்ய மாட்டோம். கடந்த காலங்களில் இலங்கையின் நீதித்துறையுடைய சுயாதீனம் தொடர்பில் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் சந்தேகங்கள் இருந்தன.
ஆனால், தற்போது நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில், நீதித்துறையிள் சுயாதீனம் எவ்வளவுதூரம் மேம்பட்டுள்ளது என்பதை நாங்கள் நிரூபித்துக் காட்டியுள்ளோம்.
ஆதலால், இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்குச் சர்வதேசம் தேவையில்லை என்பதே எமது நிலைப்பாடு." - என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
