ஓமான் வேலைவாய்ப்பில் மோசடி - இரத்து செய்யப்பட்ட அனுமதிப் பத்திரம்!
சுற்றுலா விசாவில் ஓமானுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக அழைத்துச் செல்ல முயன்ற முகவர் நிறுவனத்தின் உரிமையாளரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சீஷெல்ஸில் பணிக்கு செல்வதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்து, ஓமானுக்கான சுற்றுலா விசாவில் பெண் ஒருவரை வீட்டுப் பணிக்காக அனுப்பி வைத்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதிப்பத்திரம் இரத்து

அதனையடுத்து குறித்த பணியகத்தின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பெண் ஒருவர் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்குச் சென்றபோது, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் அவரது பதிவைச் சரிபார்த்த போது, சீஷெல்ஸுக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு விசாவும், ஓமானுக்கு வழங்கப்பட்ட சுற்றுலா விசாவும் கண்டுபிடிக்கப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்திய தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சம்பந்தப்பட்ட முகவர் நிலையத்தின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் மகேந்திர குமாரசிங்கவிடம் அறிவித்துள்ளதாகவும் அப்பணியகம் தெரிவித்துள்ளது.
கைது

குறித்த பெண் சுற்றுலா விசாவில் ஓமானுக்கு செல்ல திட்டமிட்டிருந்தமை தெரியவந்ததையடுத்து, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், முகவர் நிறுவன உரிமையாளரை கைது செய்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.