மோட்டார் சைக்கிள் சாகசம் நடத்திய இளைஞர்கள் கைது
கொழும்பு - மாலபே, பகுதியில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் அருகே, அனுமதியின்றி மோட்டார் சைக்கிள் சாகசம் நடத்திய 22 இளைஞர்கள் கடுவெல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை மாலபே - சந்திரிகா குமாரதுங்க மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 சந்தேகத்திற்கிடமான இளைஞர்களும் கடுவெல பகுதிக்கு வெளியே வசிப்பவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணை
அதன்படி, வீதியில் பொதுமக்களின் இயல்பு போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இளைஞர்கள் குழுவொன்று மோட்டார் சைக்கிள் சாகசம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் குறித்த இளைஞர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட இளைஞர்கள் வாட்ஸ்அப் குழுவொன்றின் மூலம் ஒருங்கிணைந்து இந்த மோட்டார் சைக்கிள் சாகசத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நாட்டில் பதிவு செய்யப்படாதவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் காவல்துறை பிணையில் அனுப்பபட்டுள்ளதுடன், எதிர்வரும் 5ஆம் திகதி கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |