துபாயில் கைதான 'பஸ் லலித்' பற்றிய பின்னணி - காவல்துறையின் அறிவிப்பு
சிவப்பு எச்சரிக்கை இல்லாத 38 சந்தேகநபர்களும் இதுவரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் சில நாட்களுக்குள் மேலும் சில சந்தேகநபர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினரான "பஸ் லலித்" எனப்படும் லலித் கன்னங்கர, மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திடம் (CCIB) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்' தொடர்பில் காவல்துறையினர் விசேட செய்தியாளர் சந்திப்பையொன்றை நடத்தியுள்ளனர்.
கைது நடவடிக்கை
அங்கு உரையாற்றிய காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர், 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 25ஆம் திகதி காவல்துறை மா அதிபருக்குக் கிடைத்த விசேட தகவலுக்கு அமையவே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல், மனிதக்கொலை மற்றும் கொலை முயற்சி, பலத்த காயங்களை ஏற்படுத்துதல், கப்பம் கோருதல் மற்றும் சொத்துக்களுக்குத் தீ வைப்பு உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
சந்தேகநபர் தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளின் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அவரது சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சிவப்பு எச்சரிக்கை
மேலும், 2024ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான காலப்பகுதியில் சர்வதேச காவல்துறையினரின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த 42 சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வரப் காவல்துறையினரால் முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மேலும் 109 சந்தேகநபர்களை எதிர்காலத்தில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9