நுண்கடன்களை இரத்துச்செய்! வெடித்தது மக்கள் போராட்டம்
நுண் நிதிக்கடனால் பாதிக்கப்பட்ட மக்கள் பொலனறுவை இங்கிராங்கொடையில் கடந்த மகளிர் தினம் தொடக்கம் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் அவர்களுக்குஆதரவளிக்கும் முகமாக வடக்குமாகாணத்தை பிரதிபலிக்கும் வகையில் அவர்களுக்கு வலுச்சேர்க்க யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி ,வவுனியா போன்ற பகுதிகளில் இருந்து மகாசக்தி மகளிர் சம்மேளனம், வல்லமை அமைப்பு, கிராமிய பெண்கள் அமைப்பு மற்றும் நுண்கடன் பிடியிலிருந்து விடுவோம் (பியன் ஹீலங்கா) ஆகிய அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி பலர் அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நுண்கடன்களால் பாதிக்கப்பட்ட பெண்களின் கூட்டமைப்பு எனும் பெயரில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து, 1-அனைத்து நுண்கடன்களையும் இரத்துச்செய்! 2-கொள்ளைக்கார நுண்கடன் பற்றிய கடன் கணக்கு பரிசோதனை செய்யும் வரை ,கடன் மீள அறவிடுவதை இடைநிறுத்து
! 3_நுண்கடன்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீதான நீதி நடவடிக்கைகள் அனைத்தையும் உடனே நிறுத்து! 4-நுண்கடன்களால் பாதிக்கப்பட்டர்களின் விபரங்களை கிரிப் தரவுகளில் இருந்து அகற்று! 5-பாதிப்பற்ற ,சமூக முன்னேற்றத்துக்கான பெண்களுக்கான, பெண்களாலான நிதி முறைமை ஒன்றை உருவாக்கு! போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
நாடளாவிய ரீதியில் நுண்கடங்களால் தற்கொலைகள், குடும்ப வன்முறைகள், பாலியல் தொல்லைகள் என சமூக சீரழிவுச் சம்பவங்கள் அதிகரித்தவண்ணமே உள்ளது எனவும் அரசாங்கம் இதனை கருத்தில் கொண்டு உரிய தீர்வினை வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
வடக்கு மாகாண பாதிக்கப்பட்டவரின் சார்பிலான ஆய்வு கோரிக்கையின் அடிப்படையில் கடந்த அரசாங்கத்தின் போது 2019ஆம் ஆண்டு 500மில்லியன் ரூபா மங்கள சமரவீரவால் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த நிதி கிடைத்து இரண்டு வாரங்களில் பாதீடும் நிறைவேறியது.
ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த நிதி உரியவாறாக கிடைக்கப்பெறவில்லை என்று குறிப்பிடப்பட்டது.
அதே நேரம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான 1400 மில்லியன் ரூபா கடன் வழங்கும் செயற்திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது - அதன் மூலமும் பயனடைந்தவர்கள் குறைவே,
நாளாந்தம் வடக்கிலும் நுண்கடன் சார்ந்த சீரழிவுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளதென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்தனர்.