ஊழல் ஒரு தொற்றுநோய் : ஐ.நா அமர்வில் ஜனாதிபதி அநுர பகிரங்கம்
ஊழல் ஒரு தொற்றுநோய் எனவும் இது நாட்டின் அபிவிருத்தி, ஜனநாயகம் மற்றும் சமூக நலனை அழிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய போது அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.
உலகளாவிய வறுமை, ஊழல், போதைப்பொருள் மற்றும் போர்கள் போன்ற பல சவால்களை எதிர்கொள்வதற்கு உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
காசாவில் நிகழும் பேரழிவு
காசா பகுதியில் தொடர்ந்து நிகழும் மனிதாபிமானப் பேரழிவு குறித்து அவர் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதுடன் உடனடியாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மனிதாபிமான உதவிகள் தடையில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்றும், பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்த அவர் பலஸ்தீனத்திற்கான தனி நாட்டை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
ஊழலை ஒரு 'தொற்றுநோய்' என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இது அபிவிருத்தி, ஜனநாயகம் மற்றும் சமூக நலனை அழிப்பதாகக் கூறியுதுடன் இலங்கையில் ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.
ஒன்றிணைந்துள்ள இலங்கை மக்கள்
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ''துன்பத்திலிருந்தும் இருளிலிருந்தும் விடுபட்டு, செழிப்பான தேசம் மற்றும் அழகான வாழ்க்கை' என்ற தொலைநோக்குடன் இலங்கை மக்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
ஊழலற்ற, நீதிமிக்க ஆட்சி, வறுமை ஒழிப்பு, நவீனமயமாக்கல், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை நோக்கி இலங்கை பயணிக்கின்றது.
பில்லியன் கணக்கான மக்கள் பசியால் வாடும் நிலையில், கோடிக்கணக்கான டொலர்கள் ஆயுதங்களுக்காகச் செலவிடப்படுகின்றது. எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவிக்கு வந்த பின்னர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆற்றிய முதலாவது உரை இதுவாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
