வீட்டுத்திட்ட கொடுப்பனவை வழங்குமாறு கோரி யாழில் போராட்டத்தில் குதித்த மக்கள்!
வீட்டுத்திட்டத்திற்கான மிகுதி நிதியை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் - அராலி மத்தி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று (18) சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு முன்பாக ஆரம்பமான ஆரம்பமான போராட்டம் சங்கானை பிரதான பேருந்து நிலையம் வரை பேரணியாக நகர்ந்து பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின்போது 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் சஜித் பிரேமதாசவினால் இந்த வீட்டுத்திட்டமானது வழங்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
குறித்த வீட்டுத்திட்டத்தின் மொத்த நிதியானது ஐந்து இலட்சம் என்று கூறப்பட்டாலும் முழுமையான நிதி பயனாளிகளை சென்றடையாத காரணத்தினால் இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது மக்கள் தமது கோரிக்கைகளை பதாகைகளாக தாங்கி, கோசமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் மற்றும் உதவித் திட்டப் பணிப்பாளர் ஆகியோரிடம் மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்தனர்.
கையளிக்கப்பட்ட மனுக்கள்
குறித்த மனுக்கள் பிரதேச செயலர் ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த போராட்டத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் கந்தையா இலங்கேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
