யாழ்ப்பாணத்தில் முளைக்கும் புதிய மதுபான நிலையங்கள் - வெடித்த போராட்டம்
யாழ். மாவட்டத்தில் நான்கு புதிய மதுபான விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான அனுமதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் – வலி.வடக்கு பகுதியில் புதிதாக மதுபானசாலை ஒன்றை திறப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டமானது இன்று (08.10.2026) காலை யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை பகுதியிவ் இடம்பெற்றது. தெல்லிப்பளை சந்தியில் ஆரம்பமான போராட்டத்தில் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன், அங்கிருந்து தெல்லிப்பளை பிரதேச செயலகம் வரை பேரணியாகச் சென்றனர்.
அனுமதியை ரத்து
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதன் பின்னணி குறித்து கேள்வி எழுப்பியதுடன், இத்தீர்மானம் சமூகச் சூழலுக்கும் எதிர்கால தலைமுறையினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன்போது, மதுபானசாலை அனுமதியை மறுபரிசீலனை செய்யக் கோரும் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர், தெல்லிப்பளை பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டது.
“மக்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; வலி. வடக்கின் சமூகச் சூழலை கருத்திற்கொண்டு மதுபானசாலை தொடர்பான அனுமதியை மீளாய்வு செய்ய வேண்டும்” என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.
போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |