“உத்துரு கோண அருமசிய” கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீடு
யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் விதுனி பஸ்நாயக்க எழுதிய “உத்துரு கோண அருமசிய” (வடக்கு மூலையின் அதிசயம்) என்கிற கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீடு நேற்றைய தினம்(25.01) யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில் (CTRB - Clinical Training and Research Block) இடம்பெற்றது.
யாழ் மருத்துவபீட மாணவர் ஒன்றியம், சமுதாய மருத்துவத்துறை, மற்றும் மாணவர் வளநிலையம் இணைத்து நடாத்திய குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன் கலந்து கொண்டார்.
குழந்தைநல மருத்துவ நிபுணர் பேராசிரியர் கீதாஞ்சலி சத்தியதாஸ், உளநல வைத்தியநிபுணர் சி.சிவதாஸ், உளநல வைத்திய நிபுணர் ரி. கடம்பநாதன் (மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை) போன்றோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
தெற்கில் இருந்து வந்த மாணவி
வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், மருத்துவ மாணவர்கள், ஊடவியலாளர்கள், நூலாசிரியருடைய உறவினர்கள் நண்பர்கள் என்று பலரும் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டிருந்தனர்.

நாட்டின் தென் பகுதியில் இருந்து யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகி வடக்கிற்கு வந்த மருத்துவ மாணவி ஒருவர், இனம், மதம், மொழி என்று வேறுபட்ட முற்றிலும் புதிய ஒரு நிலத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளுவதற்காக சந்தித்த சவால்களை சாதனைகளாக்கி வடமாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கும் பயணப்பட்டு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த புத்தகம் வெளிவந்திருக்கிறது.
நூலை வெளியிட்டு உரையாற்றிய யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமாரன் “தெற்கில் இருந்து வந்த மாணவி ஒருவர் இந்த நிலத்தையும், அதன் வரலாற்று, கலாச்சார அம்சங்களையும் உள்வாங்கி வடக்குமூலையின் அதிசயம் என்கிற இந்த நூலை எழுதியிருப்பதை இட்டு தாம் பெருமை அடைவதாகவும், இத்தகைய மாற்றங்கள் வரவேற்கத்தக்கது என்றும் யாழ் மருத்துவ பீடம் மாணவர்களின் இத்தகைய வளர்ச்சிப்பாதைகளுக்கு உறுதுணையாக நிற்கும்” என்றும் குறிப்பிட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
நிகழ்வில் நூல் தொடர்பான உரை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இடம்பெற்றன.
உணர்வுப்பூர்வமான வரலாற்று நூல்
சிங்கள மொழிமூல உரையினை கல்வியியலாளர் சாமிநாதன் விமலும், தமிழ் மொழிமூல உரையினை ஊடகவியலாளர் சர்மிலா வினோதினியும், ஆங்கில மொழிமூல உரையினை மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளர் ரம்யா குமார் ஆகியோரும் நிகழ்த்தினர்.

வடக்கின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், இடங்கள், சமூக வாழ்வியல் கோலங்களை நேர் சிந்தனையோடு பதிவு செய்திருக்கின்ற தன்னுடைய புத்தகத்தை பற்றி நூலாசிரியர் பின்வருமாறு பதிவு செய்கிறார்.
“இந்த நூல் என்னுடைய முதலாவது படைப்பு. இலங்கையின் வட பிராந்தியத்தில் ஆறு மறக்கமுடியாத ஆண்டுகளை கடந்து வந்த அனுபவங்களை மனதார பதிவு செய்திருக்கின்ற ஒரு உணர்வுப்பூர்வமான வரலாற்று நூலாகும்.
இந்த தனித்துவமான பிராந்தியத்தை வரையறுக்கின்ற நிலப்பரப்புகள், மக்கள், நினைவுகள் மற்றும் படிப்படியான மாற்றங்களை இது பதிவு செய்கிறது.
பரபரப்பான நகரங்களிலிருந்து தொலைதூரத்தில் அமைதியை சூடி இருக்கின்ற கடற்கரை பாதைகள் வரை ஒவ்வொரு பயணமும் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிப்போன பண்பாடு, வரலாறு மற்றும் நம்பிக்கைகளை பிரதிபலிக்கிறது.
இது ஒரு பயணக் கதை மட்டுமல்ல, மாறாக என்னுடைய பார்வைகளை மாற்றிய சந்திப்புகள், ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய சமூகங்கள், மற்றும் வடக்கின் ஆன்மாவை வெளிப்படுத்தும் தருணங்களைப் பிரதிபலிக்கும் தனிப்பட்ட சிந்தனைகளின் தொகுப்பாகும்.
ஆறு ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட அனுபவங்கள், பார்வைகள் மற்றும் உணர்வுகள் மூலம் வாசகர்கள் எழுத்தாளருடன் இணைந்து பயணம் செய்து வடக்கு தீபகற்பத்தை மறுபடியும் கண்டறிய அழைக்கப்படுகிறார்கள்.
இது ஒரு நிலத்திற்கும் அதன் மக்களுக்கும் செலுத்தப்படுகின்ற மரியாதை மிக்க நெருக்கமான பதிவாகும்”.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

