இலங்கை சிறையிலுள்ள பாகிஸ்தான் பிரஜைகளுக்கு விடுதலை
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் (Pakistan) பிரஜைகள் 7 நாட்களில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கான இலங்கையின் ஓய்வுபெற்ற உயர்ஸ்தானிகர் ரவீந்திர சந்திரசிறி விஜேகுணரத்ன (Ravindra Chandrasiri Wijegunaratne), பாகிஸ்தானின் உள்துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைச்சர் மொஹ்சின் நக்வியை (Mohsin Naqvi) இன்று (19) இஸ்லாமாபாத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் இலங்கை சிறையில் உள்ள பாகிஸ்தான் பிரஜைகளை விடுவிப்பது மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
பாகிஸ்தான் கைதிகளின் விடுதலை
இதன்படி பல ஆண்டுகளாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கைதிகளை ஏழு நாட்களில் அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் கைதிகளை திருப்பி அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை முடிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதேவேளை பாகிஸ்தான் கைதிகளின் விடுதலைக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்ததுடன் அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் முடிக்கப்பட்டு வருவதாக இலங்கை உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
அத்துடன் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் எல்லை பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
பரஸ்பர உறவு
இந்த நிலையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் காலப்போக்கில் வலுவடைந்துள்ளதாக உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பரஸ்பர உறவுகளை மேலும் மேம்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது காலத்தின் தேவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை பாகிஸ்தானுடனான உறவுகளுக்கு இலங்கை அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |