13ஆவது திருத்த சட்டத்தை நீக்கிக் காட்டுங்கள் : அநுர அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்
13ஆவது திருத்தம் தேவையற்றதெனில், ஜேவிபி அரசாங்கம் நாளையே நாடாளுமன்றத்தைக் கூட்டி அதனை இரத்து செய்ய முடியுமல்லவா என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) வலியுறுத்தியுள்ளார்.
ஐ.தே.க.வின் யாழ் - கிளிநொச்சி அமைப்பாளர் விஜயகலா மகேஸ்வரனால் (Vijayakala Maheswaran) நேற்று (3) ஏற்பாடு செய்யப்பட்ட யாழ். மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடன் விசேட சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் (Narendra Modi) ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடுகளை மாற்றமின்றி இந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
வங்குரோத்து நிலை
அவ்வாறு நடைமுறைப்படுத்தினால் மாத்திரமே இந்திய - இலங்கை நட்புறவு பலப்படுத்தப்படும். அதற்கான முழுமையான ஒத்துழைப்பை ஐக்கிய தேசிய கட்சி என்ற ரீதியில் அரசாங்கத்துக்கு வழங்குவோம்.
பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தோடு இந்து - லங்கா உறவுகளை வலுப்படுத்துவோம் என்பதை வலியுறுத்துகிறோம். இதன் ஊடாக இலங்கை மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைப் பெற்றபோதிலும், அவர்களால் எதுவுமே செய்ய முடியாதுள்ளது. ஆனால், ஐக்கிய தேசிய கட்சி அவ்வாறானதல்ல. ஒரேயொரு நாடாளுமன்ற ஆசனத்துடன் வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கக்கூடியளவு பலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு காணப்பட்டது.
13ஆவது அரசியலமைப்பு திருத்தம்
ரணில் விக்ரமசிங்க தனது ஈராண்டு ஆட்சி காலத்தில் 93 சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார். தற்போதைய அரசாங்கத்துக்கு அவ்வாறு ஏதேனும் மாற்றங்களை செய்ய முடியுமா?
1987ஆம் ஆண்டு 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி (Rajiv Gandhi) மற்றும் இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன (J. R. Jayewardene) பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து ஒப்பந்தம் கையெழுத்திட்டு மாகாண சபை முறைமையை கொண்டு வந்தனர்.
அன்று மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால் அதற்கான தண்டனை மரணம் என ஜே.வி.பி. அச்சுறுத்தியது. மாகாண சபை உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இவர்கள் கூறியதைப் போன்று 13ஆவது திருத்தம் தேவையற்றதெனில், நாளையே நாடாளுமன்றத்தைக் கூட்டி அதனை இரத்து செய்ய முடியுமல்லவா? அவ்வாறில்லை என்றால் அதனை நீக்குவதாக மக்களுக்கு பொய் வாக்குறுதி அளித்தமைக்காக ஜே.வி.பி. அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்