ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை - நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்
ஸ்ரீலங்காவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை மீது நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் விவாதம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார். இந்த விவாதத்தை எதிர்வரும் 10ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தகவல் வெளியிட்டுள்ள அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை, சபை ஒத்திவைப்பு பிரேரணையாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 10 ஆம் திகதி, பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான அவகாசம் வழங்கப்படாது, முற்பகல் 10.00 மணி முதல் 11.00 மணி வரை உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து, ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணையாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 5.30 வரை விவாதத்துக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் விசாரணைக்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால், கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை எந்த வகையிலும் தாக்குதலை தூண்டியவர்கள், உதவியோர் மற்றும் பின்னால் இருந்து செயற்பட்டவர்களை காட்டிக்கொடுப்பதாக இல்லை என்பதால், பூரணமான அறிக்கையாக இல்லை என்கிற விமர்சனத்தையே அரச மற்றும் எதிர்கட்சியினர் முன்வைத்து வருகின்றனர்.
இதனிடையே குறித்த அறிக்கை கொழும்பு பேராயர் கர்தினாலிடமும், நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், குறித்த அறிக்கை மீது மூன்று நாள் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதையும் சஜித் அணியினர் கோரிவந்தனர்.
இந்த நிலையில் முழுநாள் விவாதத்திற்கே தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.