ரஷ்யாவின் முக்கிய பிரதிநிதி ஒருவர் இலங்கையில்.! எரிசக்தி பிரச்சினைக்கு தீர்வு
ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் தலைமையிலான தூதுக்குழு ஒன்று உத்தியோகபூர்வ பயணத்திற்காக இன்று (26) இலங்கைக்கு வந்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்தப் விஜயத்தின் போது, நாட்டில் நிலவும் எரிசக்தி நெருக்கடிக்குத் தீர்வு காண உதவும் சாத்தியமான தீர்வுகளை மையமாகக் கொண்டு பல சந்திப்புகளும் கலந்துரையாடல்களும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் ஆர்வம்
ரஷ்ய செய்தி நிறுவனமொன்றின் படி, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் பிற எரிசக்தி வளங்களைப் பெறுவதில் இலங்கை ஆர்வமாக உள்ளது என்று எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் தெரிவித்துள்ளார்.

எரிபொருளைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை அரசாங்கம் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாக இந்த வாரம் அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.
செவ்வாய்க்கிழமை (24) அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய ஊடக சந்திப்பில் பேசிய அவர், அரசாங்கங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலம் எரிபொருளைப் பெறுவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கூறியிருந்தார்.
ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை
அதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர், “ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகள் ராஜதந்திர மட்டத்தில் நடைபெற்று வருகின்றன.

கடந்த காலத்தில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் பெறுவதற்கான வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை, ஆனால் அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் இதைச் செய்ய முடியுமா என்று நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்." என்றார்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் தலைமையிலான தூதுக்குழு இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |