ரஷ்யாவை கதிகலங்க வைத்த உக்ரைன்..! பாதுகாப்பு அமைச்சின் மீது சீறிய இராணுவ தலைவர்
ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது இன்று ஆளில்லா வான்கலங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் வினைத்திறனற்ற நிலையே காரணம் என அதன் தனியார் இராணுவமான வாக்னர் நிறுவனத்தின் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று மொஸ்கோ நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சை மையப்படுத்தி அவர் தனது அதிரடியான குற்றச்சாட்டைத் தொடுத்துள்ளார்.
மொஸ்கோ மீதான தாக்குதல்
ரஷ்ய இராணுவத் தலைமையுடன் தொடர்ந்தும் கடுமையாக முரண்பட்டுவரும் ஜெவ்னி பிரிகோஜின் மொஸ்கோ மீது இன்று நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சியையடுத்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் மீது சீறியுள்ளார்.
ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா வான்கலங்கள் மூலமான தாக்குதலைத் தடுக்கும் தொழில்நுட்பங்களில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் எதுவும் செய்யவில்லையென குறிப்பிட்ட அவர், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளை மிகமோசமாக விமர்சித்ததுடன் மொஸ்கோவைத் தாக்க அனுமதித்தவர்கள் வீடுகளுக்கு செல்லவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பிரிகோஜினின் இந்த கண்டனங்கள் வெளிப்பட்ட நிலையில், கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவோ இந்தத் தாக்குதலை தடுக்க பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் சரியாக பணியாற்றியதாகவும் வான் பாதுகாப்பு அமைப்பும் நன்றாக வேலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலின் பின்னணி
எனினும் மொஸ்கோ மீதான இந்தத் தாக்குதலின் பின்னணியில் தனது நாடு இருப்பதாக கூறப்படும் செய்திகளுக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது.
எனினும் இவ்வாறான தாக்குதல்களின் அதிகரிப்பு குறித்து தமது தரப்பு மகிழ்வதாகவும் உக்ரைனிய அதிபரின் ஆலோசகர் கூறியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் வான்தாக்குதல் நேற்று முன்தினம் முதல் இன்று அதிகாலை வரை நடத்தப்பட்டு பின்னணியில் அதற்குப் பின்னர் மொஸ்கோ மீது இந்தத் தாக்குதல் நடத்தபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.