இலங்கை கடலை சந்திரசேகரனிடமிருந்து காப்பாற்றுங்கள்! நீதிமன்றத்தை நாடவுள்ள கடற்றொழிலாளர்கள்
கடற்றொழிலாளர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடற்தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை முன்னெடுக்கவுள்ளதாக அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்ற ரீதியில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய அவர், இதற்காக பொதுமக்களிடமிருந்து எதிர்வரும் நாட்களில் உண்டியலில் ஒரு ரூபாய் பணம் சேர்க்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடற்தொழில் சார்ந்தோ, வாழ்வாதாரம் சார்ந்தோ, இந்தியா கடற்றொழிலாளர்களின் பிரச்சினை சார்ந்தோ முன் அனுபவம் இல்லாத அமைச்சர் சந்திரசேகரனை மாற்றூமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கையினை முன்வைப்பதாக தெரிவித்துள்ளார்.
பாரிய அளவில் போராட்டம்
எமது தமிழ் கடலினை கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனிடமிருந்து காப்பாற்றுமாறும் கடற்றொழில் அமைச்சரை உடனடியாக மாற்றி அனுபவமுள்ள ஒருவரை அமைச்சராக நியமிக்குமாறும் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

மேலும் எமது கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த தவறும் பட்சத்தில் பாரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதன்போது குறிப்பிட்டார்.
மேலும் கடந்த தினம் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் ஒன்பது பேரையும் விடுதலை செய்யுமாறு இந்திய கடற்றொழில் அமைப்புக்கள் குறிப்பிடுவது மிகவும் தவறான விடயம். அதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டே அவர்களை விடுதலை செய்ய முடியும்.
கடந்த தினங்களில் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களின் 80 வலைகள் இந்திய கடற்றொழிலாளர்களால் நாசம் செய்யப்பட்டது.
இதன் போது இந்திய கடற்றொழிலாளர்களின் எவரும் அதை பற்றி கூறவில்லை. சரியான சட்ட ரீதியான நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டே அவர்களுக்கான விடுதலையும் வழங்கப்படும்” என இதன் போது தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |