யாழ்ப்பாணத்தில் அகற்றப்பட்ட சிங்கள வர்த்தக நிலையங்கள்! மொட்டுக்கட்சிக்கு பதிலடி கொடுத்த விஜேபால
யாழ்ப்பாணத்தில் அகற்றப்பட்ட சிங்கள வர்த்தக நிலையங்கள் என்பது நாட்டின் ஏனைய பகுதிகளைப் போலவே சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்றும் சாதாரண நடவடிக்கை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் சர்ச்சைக்குறிய கருத்துக்களை முன்வைத்த மொட்டுக்கட்சியின் உறுப்பினர் சானக மாதுகொட முன்வைத்த கருத்துக்களுக்கு பதில் வழங்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட ஆகியோருக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
விஜேபால வழங்கிய பதில்
இதன்போது மாற்றுத்திறனாளி இராணுவ வீரர்களுக்கான கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் சிங்கள வர்த்தக நிலையங்கள் அகற்றப்படுவதாகவும் சானக மாதுகொட முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அமைச்சர்,

"மாற்றுத்திறனாளி இராணுவ வீரர்களுக்கான கொடுப்பனவுகளில் ஒரு ரூபா கூட குறைக்கப்படவில்லை. மாறாக, அவர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்கவே நாம் முன்மொழிந்துள்ளோம். அவர்களைப் பாதுகாப்பது எமது பொறுப்பு.
மேலும், யாழ்ப்பாணத்தில் சிங்கள வர்த்தக நிலையம் அகற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த மாத்தறை உணவகத்தின் முன்பக்கத்திலிருந்த அங்கீகரிக்கப்படாத பகுதி, அதன் உரிமையாளரின் முழுமையான சம்மதத்துடனேயே அகற்றப்பட்டது.
இனவாத சாயம் பூசும் முயற்சி
நாட்டின் ஏனைய பகுதிகளைப் போலவே யாழ்ப்பாணத்திலும் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்றும் சாதாரண நடவடிக்கையே இதுவாகும்.

தமது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இவ்வாறான சாதாரண நடவடிக்கைகளுக்கு இனவாத சாயம் பூச வேண்டாம்" என விமர்சித்துள்ளார்.
அமைச்சரின் இந்தக் கருத்துக்கு உடனடியாகப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட, "நாங்கள் எமது இனத்திற்காகக் குரல் கொடுப்பது உங்களுக்கு இனவாதமாகத் தெரிகிறதா?
அப்படியானால், நீங்கள் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்களா?" என அமைச்சரை நோக்கி ஆவேசமாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |