மாவீரர் துயிலுமில்லங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நல்லதொரு புரந்துணர்வு இனங்களுக்கிடையில் ஏற்பட வேண்டுமாகவிருந்தால் நிச்சயமாக மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் அகன்று செல்லவேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கில் நேற்று (08) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”கார்த்திகை மாதம் என்பது தேச விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கியவர்களை நினைவு கூருகின்ற மாதம். அந்தவகையிலே கார்த்திகை 21 தொடக்கம் 27ஆம் திகதிவரை மாவீரர் வாரமாக தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசமெங்கிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வருட மாவீரர் நினைவேந்தல் சிறப்பாக நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. புலம்பெயர் தேசங்களிலும் அந்தந்த நாடுகளிலும் மாவீரர் நினைவேந்தல் இடம்பெறுவதற்க்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
தாயகத்திலே ஒரு சில மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினர் அகன்றிருக்கின்றனர். கணிசமான மாவீரர் துயிலுமில்லங்களில் இராணுவ முகாம்கள் உள்ளன.

இதனால் ஒவ்வொரு வருடமும் தமது பிள்ளைகளுக்கு சுதந்திரமாக நினைவேந்தல் செய்வதற்கு மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து வெளியேற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.
அந்தவகையிலே இந்தவருடமும் மாவீரர் வாரத்தை சிறப்பாக அனுஸ்டிப்பதற்கு எஞ்சியிருக்கின்ற மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறி ஒரு தேசிய நல்லிணக்கத்தோடு, விட்டுக்கொடுப்போடு இந்த வருடமும் மாவீரர்களை நினைவேந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கடற்றொழில் அமைச்சர் ஒரு அறிவித்தலை விடுத்திருக்கின்றார். அதாவது மாவீரர் துயிலுமில்லங்களில் இருக்கின்ற இராணுவ முகாம்களை அகற்றுவதற்கான உத்தரவை ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளருக்கு கொடுத்திருக்கின்றார்.
ஜனாதிபதிக்கு நன்றி
எதிர்வரும் காலங்களில் மக்கள் சுதந்திரமாக மாவீரர்களை நினைவேந்தல் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறியிருக்கின்றார். நாங்கள் அந்த கருத்தை வரவேற்கின்றோம்.
இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம். இது பேச்சளவிலே இல்லாமல் செயலளவிலே இருக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.

மாவீரர் பெற்றோர்கள், உறவினர்கள், உரித்துடையோர் எல்லோரும் இந்த துயிலுமில்லங்களுக்கு அருகிலேதான் வசித்து வருகின்றனர். இவர்கள் மாவீரர் துயிலுமில்லங்களை கடந்து செல்கின்றபோது வலிகளோடும் வேதனைகளோடும்தான் கடந்து செல்கின்றனர்.
ஆகவே போரின்மீது ஒரு சமாதானத்தை கொண்டுவந்துள்ளோம் என்று கூறிவருகின்ற அரசாங்கம் மக்களது வேதனைகளை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் தங்களது பிள்ளைகளது கல்லறைகளிலே தான் இராணுவம் ஏறி இருக்கின்றது என்ற மன வேதனையுடன்தான் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறெனில் ஒரு தேசிய நல்லிணக்கம் வருவதற்குரிய வாய்ப்பே இல்லை. ஆகவே ஒரு இனம் இன்னொரு இனத்தின் மவீர்களது கல்லறைமீது ஏறியிருப்பது என்பது தேசிய நல்லிணக்கத்தை பாதிக்கும்.
நல்லதொரு புரந்துணர்வு இனங்களுக்கிடையில் ஏற்பட வேண்டுமாகவிருந்தால் நிச்சயமாக மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் அகன்று செல்லவேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |