வலுப்படுத்தப்படவுள்ள இலங்கை-மியன்மார் உறவு! பிரதமர் அறிவிப்பு
இலங்கை (Sri Lanka) மற்றும் மியன்மாருக்கு (Myanmar) இடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் பௌத்த உறவுகளை மேலும் மேம்படுத்த எதிர்பார்ப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பதில் மியன்மார் தூதுவர் லீ யி வின் (Lei Yi Win) உடனான சந்திப்பின் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன (Yadamini Gunawardena), பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க (Anura Dissanayake), மியன்மார் தூதரகத்தின் ஆலோசகர் தெப் சா தோ (Thep Zaw Toe) ஆகியோர் கலந்து கொண்டனர்.
வர்த்தக உறவுகள்
இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள், தேயிலை மற்றும் தென்னை வர்த்தகம், கனிமங்கள், பௌத்த சுற்றுலா போன்றவற்றுக்கு விசேட கவனம் செலுத்துவதன் மூலம் சுற்றுலா போன்ற பல துறைகளில் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த முடியும் என தினேஷ் குணவர்தன இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
முன் பதப்படுத்தப்பட்ட தென்னை உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்யும் இலங்கையின் அதிக தேவையை பூர்த்தி செய்ய தென்னை உற்பத்தி போதுமானதாக இல்லாத காரணத்தினால், மியன்மார் இலங்கைக்கு தேங்காய்களை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தேயிலைக்கு பதிலாக தென்னையை பண்டமாற்று செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத மற்றும் இராஜதந்திர உறவுகள்
சுமார் 2600 ஆண்டுகளுக்குப் பின்னரும் புத்தரின் தத்துவம் இன்னும் பிரசித்தி பெற்று விளங்குவதாகவும், அது இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான நெருங்கிய மத மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த உதவியது எனவும் தினேஷ் குணவர்தன நினைவூட்டியுள்ளார்.
குறிப்பாக தேரவாத பௌத்தத்தின் பாதுகாப்பிற்கு மியன்மாரிடமிருந்து கிடைத்த ஆதரவை நினைவுகூர்ந்த சிறிலங்கா பிரதமர், இந்த நாட்டில் உபசம்பதாவை நிறுவுவதற்கு மியன்மார் வழங்கிய ஆதரவின் மூலம் கடந்த காலத்திலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே சமய ரீதியான நல்லுறவு இருந்ததையும் நினைவு கூர்ந்தார்.
வர்த்தக கண்காட்சி
இந்த நிலையில், மியன்மாரின் யாங்கூனில் நடைபெறவுள்ள வர்த்தக கண்காட்சியில், இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் சாத்தியங்கள் குறித்து ஆராய்வதற்காக இலங்கை பங்கேற்க முடியும் என பதில் தூதுவர் லீ யி வின் தெரிவித்துள்ளார்.
மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு இந்த வருடம் 75 வருடங்கள் பூர்த்தியாவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மியான்மார் 11 ஆம் நூற்றாண்டில் பதான் ராஜவம்சத்தின் போது தேரவாத பௌத்தம் நிறுவப்பட்ட 1000 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |