சர்ச்சையை ஏற்படுத்திய எம்.பிக்களின் சம்பள விவகாரம் : அரச தரப்பின் அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள விவகாரம் குறித்து பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெளிவுபடுத்தியுள்ளார்.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை வேதனங்கள் உயர்த்தப்படவில்லை எனவும் மாறாக, தற்போதைய எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப எரிபொருள் கொடுப்பனவு திருத்தியமைக்கப்பட்டமையினால், அவர்களின் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (07) உரையாற்றிய போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் கொடுப்பனவு
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து, தகுதிவாய்ந்த அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை அரசாங்கம் திருத்தியமைத்துள்ளது.

இதன் காரணமாக, எரிபொருள் கொடுப்பனவைப் பெறும் அனைத்து அரச அதிகாரிகளின் மாதாந்தக் கொடுப்பனவிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாகவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் திருத்தப்பட்ட எரிபொருள் கொடுப்பனவு மூலம் இந்த அதிகரிப்பு கிடைத்துள்ளது“ என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் சம்பளத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது மாதாந்த சம்பளப் பட்டியலை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |