நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படக்கூடாது : ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை!
சிறிலங்கா நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது தொடர்பில் வெளியான செய்திகள் தொடர்பாக இன்று (6) நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்தால், அதுவரை கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படக் கூடாதென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒத்திவைக்கப்படவுள்ள நாடாளுமன்றம்
சிறிலங்கா நாடாளுமன்றத்தை எதிர்வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் ஒத்திவைக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
கோப் எனப்படும் நாடாளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான நிலையியற் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவை பதவி நீக்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாடாளுமன்றில் கேள்வி
இது தொடர்பில் லக்ஸ்மன் கிரியெல்ல சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுமாயின், ஏற்கனவே கேட்கப்பட்ட முக்கியமான கேள்விகளுக்கு பதில் கிடைக்காதெனவும் நாடாளுமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டிய நிலை ஏற்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் செயற்பாட்டை தவிர்க்குமாறும் லக்ஸ்மன் கிரியெல்ல கோரியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |