இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் தரை கையாளுதல், உணவு வழங்குதல் மற்றும் விமான எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் தனியார் துறையையும் ஈடுபடுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக சிவில் விமான சேவைகள் பணிப்பாளர் நாயகம் பி.ஏ.ஜெயகாந்த தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், இந்த சேவைகள் தற்போது அரச ஏகபோகமாக உள்ளது.
இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் மேற்கூறிய சேவைகளை வழங்குவதற்கு தனியார் தரப்பினரை அழைக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.
தாராளமயமாக்கும் நடவடிக்கை

இந்த வார தொடக்கத்தில், துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஊடகவியலாளர்களிடம் கூறுகையில், இலங்கை ஏற்கனவே விமான நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தை தாராளமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறியிருந்தார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் கையொப்பமிடப்பட்டுள்ள வேலைத்திட்டத்திற்கு அமைவாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட அரச நிறுவனங்களை சீர்திருத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.