சூடுபிடித்த வாத விவாதம்- கலவர பூமியான ஸ்ரீலங்கா நாடாளுமன்றம்!
ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசன வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவின் பெயர் அறிவிக்கப்பட்டமைக்கு எதிர்க்கட்சியினர் இன்று கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றில் எதிர்க்கட்சியினர் கருப்புப் பட்டி அணிந்து வந்ததுடன் அமளிதுமளியிலும் ஈடுபட்டனர்.
இதனால் நாடாளுமன்றில் பதற்றம் ஏற்பட்டதையடுத்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் குறித்து சபாநாயகர் எடுத்த முடிவை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று கருப்பு பட்டிகளை அணிந்திருந்ததோடு, பதாதைகளையும் ஏந்தி எதிர்ப்பு வெளியிட்டனர்.
கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று அறிவித்தார்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற பொது செயலாளர் தேர்தல் ஆணையகத்திற்கு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், தேர்தல் ஆணையகத்தின் அறிவுறுத்தலின்படி அஜித் மான்னப்பெருமவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதனை வர்த்தமானியில் வெளியிடவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.