தொடரும் யுக்திய சுற்றிவளைப்பு! கண்டனம் வெளியிட்டுள்ள ஐ.நா
சிறிலங்கா அரசாங்கம் யுக்திய சுற்றிவளைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் தொடர் கைது நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கரிசனை வெளியிட்டுள்ளது.
இலங்கை தற்போது எதிர்நோக்கும் போதைப்பொருள் பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து மாத்திரம் சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பான கொள்ளைகளை இந்த நடவடிக்கையின் போது பின்பற்ற தவறியுள்ளதாகவும் அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுக்திய சுற்றிவளைப்பு
இலங்கையில் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் இதுவரை 29 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், கைது செய்யப்பட்ட சிலர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதோடு மோசமாக நடத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனைகளை மேற்கொள்வதற்கான நீதிமன்ற அனுமதியில்லாமல் சிறிலங்காவின் படையினர் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சோதனைகளின் அடிப்படையில், போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை கைது செய்து தடுத்து வைக்க சிறிலங்கா காவல்துறையினர் நடடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கைது செய்யப்பட்டவர்களுள் நூற்றுக்கணக்கானவர்கள் புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளின் போது, மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மக்களின் உரிமையை அடிப்படையாக கொண்ட அணுகுமுறை
அனுமதியற்ற தேடுதல்கள், கண்மூடித்தனமான கைதுகள், தடுத்து வைத்தல், மோசமாக நடத்துதல், சித்திரவதை செய்தல், பொது இடங்களில் ஆடைகளை களைந்து சோதனை நடத்துதல் போன்ற பல சட்டவிரோதமான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவ்வாறாக பாதிக்கப்பட்டவர்களின் சட்டத்தரணிகளுக்கும் சிறிலங்கா காவல்துறையினரால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சிறிலங்கா அரசாங்கம் யுக்திய நடவடிக்கையை மறு ஆய்விற்குட்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன், மக்களின் உரிமையை அடிப்படையாக கொண்ட அணுகுமுறை குறித்த நடவடிக்கையின் போது பின்பற்றப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |