இந்தியாவால் பயனடையப்போகும் இலங்கை !
இலங்கை மற்றும் இந்தியா இணைந்து முன்னெடுக்கும் பாரிய திட்டங்கள் காரணமாக முழு இலங்கையும் பயனடையும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha)தெரிவித்துள்ளார்.
இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தை திருகோணமலையில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, சந்தோஷ் ஜா இதனை தெரிவித்துள்ளார்.
தமிழர் தலைநகரில் திறக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம்
திருகோணமலைக்கு பயணம் செய்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இன்று சாம்பல் தீவு பாலத்திற்கு அருகிலுள்ள இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன்(Senthil Thondaman) ஒன்றிணைந்து திறந்து வைத்துள்ளார்.
இதன் போது உரையாற்றிய சந்தோஷ் ஜா, திருகோணமலைக்கும் இந்தியாவுக்குமான தொடர்புகளை விஸ்தரிக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த காலங்களில் இருந்தே இந்திய நிறுவனங்கள் தொழில்வாய்ப்புக்களை வழங்குவதிலும் பொருளாதார வாய்ப்புக்களை வழங்குவதிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தன.
20 வருடத்திற்கு முன் தடம் பதிப்பு
இந்திய எண்ணை நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் இந்த நடவடிக்கையில் முதன்மை வகிக்கிறது. 20 வருடத்துக்கு முன்னர் குறித்த நிறுவனம் இலங்கையில் தடம்பதித்தது. இந்த நிறுவனத்தின் திருகோணமலையில் உள்ள கிளை கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தில் பாரிய பங்காற்றும்.
தற்போது இந்திய எண்ணை நிறுவனம் முழுமையாக இலங்கையின் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் அபிவிருத்தி தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்திய மற்றும் இலங்கைக்கிடையிலான உறவு மேம்பட்டுள்ளது. இரண்டு நாடுகளும் இணைந்து முன்னெடுத்து வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியாவிலிருந்து திருகோணமலைக்கு எண்ணெய் குழாய்
இந்தியாவிலிருந்து திருகோணமலைக்கு எண்ணெய் குழாய் ஒன்றை இணைக்க திட்டமிட்டுள்ளோம். எதிர்காலத்தில் இந்த விடயத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதேவேளை, திருகோணமலையில் இந்தியாவின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படும் மாதிரிக்கிராம வீடமைப்புத்திட்டத்தினையும் சந்தோஷ் ஜா பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |