புதுச்சேரி தேர்தலில் தலையிடுவதாக இலங்கை தூதுவர் மீது குற்றச்சாட்டு
புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்றதைத் தொடர்ந்து, தென்னிந்தியாவிற்கான இலங்கையின் பிரதி தூதரக அதிகாரி கணேசநாதன் கேதீஸ்வரன், புதுச்சேரியின் உள் விவகாரங்களில் தலையிட்டதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரியின் வைத்திக்குப்பம் பகுதியில் உள்ள கடற்றொழிலாளர்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக, தென்னிந்தியாவிற்கான இலங்கையின் பிரதி தூதரக அதிகாரி கணேசநாதன் கேதீஸ்வரன், லச்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினால் அழைக்கப்பட்டிருந்தார்.
பாஜகவின் புதுச்சேரி தலைவரும், அவர்களின் ராஜ்பவன் தொகுதி வேட்பாளருமான வி. பி. ராமலிங்கமும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்பட்டமான மீறலாக உள்ளது
"வெளிநாட்டுத் தூதர்கள் அந்த நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்பது கடமையாகும்" என்று கூறும் 1961 வியன்னா தூதரக உறவுகள் உடன்படிக்கையின் அப்பட்டமான மீறலாக இது உள்ளது.

இந்தியாவும் இலங்கையும் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன," என்று கேரா X-இல் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்றும், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இதுகுறித்து தூதரக ரீதியான பதில் அளிப்பாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
