தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர் : நாடு திரும்ப விரும்பாத இலங்கையர்கள்
இஸ்ரேலில் போர் நிலை தொடர்ந்து வந்தாலும், அங்குள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான எந்தவொரு கோரிக்கையினையும் இதுவரை முன்வைக்கவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், தொடர்ந்தும் பலர் இஸ்ரேலில் தொழில் வாய்ப்பை பெறுவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த பணியகத்தின் பேச்சாளர் காமினி செனவிரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தாம் பாதுகாப்பாக இருப்பதாக கருதுவதால் மீண்டும் நாடு திரும்புவதற்கான கோரிக்கையை முன்வைக்காதிருக்க கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இது தொடர்பான எந்தவொரு கோரிக்கையும் இலங்கைக்கான தூதரகத்திற்கோ, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கோ இதுவரை கிடைக்கப் பெறவில்லை என அவர் கூறியுள்ளார்.
தொழில் வாய்ப்புக்கள்
இஸ்ரேலுக்கு வருடாந்தம் 2 ஆயிரம் தொழில் வாய்ப்புக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாக காமினி செனவிரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இஸ்ரேல் மற்றும் காசாவுக்கிடையிலான போர் நிலையிலும், இஸ்ரேலுக்கான தொழில் வாய்ப்பு பயிற்சிகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.