மாகாணசபை முறைமை “வெள்ளை யானை” அல்ல! சில குறைபாடுகள் மட்டுமே உள்ளன - ஆளும் கட்சி உறுப்பினர்
மாகாணசபை முறைமையை “வெள்ளை யானை” என்று விமர்சிப்பது தவறாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண சபை உறுப்பினர் ஒன்றியத்தின் தலைவர் காஞ்சன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் பொதுத்தேர்தலை நடத்தமுடியும் என்றால் ஏன் மாகாணசபை தேர்தலை சுகாதார பாதுகாப்பு வழிமுறைமைகளுக்கு அமைய நடத்த முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாகாண சபை தேர்தல் குறித்து பொதுஜன பெரமுனவின் மாகாண சபை உறுப்பினர் ஒன்றிய உறுப்பினர்களுக்கிடையில் நேற்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறைமையில் நடத்தவே உயர்மட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்த பல்வேறு தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
மாகாண சபை தேர்தலை இம்முறை மாத்திரம் பழையமுறையில் நடத்தி எதிர்காலத்தில் புதிய தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொண்டு புதிய தேர்தல் முறைமையை நடைமுறைப்படுத்தல் குறித்து தேரதல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்கள்.