சுஜித் சஞ்சய் பெண்களை மதிப்பவர் : ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு
ஒருவர் மீது தற்காப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தாக்குதலாக கருதப்படாதென ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
சிறிலங்கா இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தாக்கப்பட்டமை குறித்து தமது உத்தியோப்பூர்வ ட்விட்டர் தளத்தில் கருத்து வெளியிட்ட கட்சியின் இளைஞர் பிரிவின் துணை தலைவர் ரெஹான் ஜயவிக்ரம, இதனை தெரிவித்துள்ளார்.
டயனா கமகே மீதான தாக்குதல்
டயனா கமகே நாடாளுமன்ற வளாகத்தில் தாக்கப்பட்டமை குறித்து சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் பல செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமது கட்சியின் உறுப்பினரான சுஜித் சஞ்சய் பெண்களை மதிக்க தெரிந்தவர் என ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் பிரிவின் துணை தலைவர் ரெஹான் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் தாம் தனிப்பட்ட ரீதியில் சுஜித் சஞ்சயிடம் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்பாதுகாப்புக்கு பாலினம் கிடையாது
இதன் போது, தம்மை தாக்க டயனா கமகே முயன்றாகவும் தற்பாதுகாப்புக்காக அதனை தாம் தடுத்ததாகவும் சுஜித் சஞ்சய் கூறியதாக ரெஹான் ஜயவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.
ஒருவர் ஒருவரை உடல் ரீதியாக தாக்க முற்படும் போது அதனை தடுக்க முயற்சிப்பது தற்காப்பு எனவும் இதற்கு ஆண் மற்றும் பெண் எனும் பாலினத்தை அடிப்படையாக கொண்டு ஏதும் கூற முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
I have never condoned it when certain SJB MPs have been disrespectful toward women legislators. I didn't defend it then and won't do so now.That being said, today's video was based on the complaint made against SJB MP Sujith Perera by MP Diana Gamage, where she accused him of…
— Rehan Jayawickreme (@RehanJayawick) October 20, 2023
சமூக ஊடகங்களில் பரவும் காணொளி
தமது கட்சி உறுப்பினரான சுஜித் சஞ்சயை தாக்க டயனா கமகே முயற்சித்தமை தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் தற்போது பரவுவதாகவும் இதன் மூலம் அவர் குற்றமற்றவர் என்பது நிரூபனமாவதாகவும் ரெஹான் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
டயனா கமகே வார்த்தைகள் மூலம் சுஜித் சஞ்சயை துஷ்பிரயோகப்படுத்தியதாகவும் அவரை தாக்க முயன்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து, தற்பாதுகாப்புக்காக சுஜித் சஞ்சய் டயனா கமகேவை தள்ளி விட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் இளைஞர் பிரிவின் துணை தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகள் ஆரம்பம்
இதேவேளை, நாடாளுமன்றத்தில் தாம் தாக்கப்பட்டதாக டயனா கமகே வெலிக்கடை காவல் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்த காவல் நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.