சஜித்திற்கு சுமந்திரன் ஆதரவு : கிண்டலடிக்கும் சிறிலங்கா ஜனநாயக கட்சி
ஜனாதிபதி தேர்தலில் சுமந்திரன் (M. A. Sumanthiran) போன்றவர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு (Sajith Premadasa) ஆதரவை வழங்க முன்வந்திருப்பது வேடிக்கையாக இருக்கின்றது என சிறிலங்கா ஜனநாயக கட்சியின் (SLDP) தலைவர் கலாநிதி அன்வர் எம் முஸ்தபா (Anvar M.Musthafa) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் ரணிலை விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரித்து "இயலும் ஸ்ரீலங்கா" பிரசாரத்தில் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை சிறிலங்கா ஜனநாயக கட்சி உட்பட முக்கிய பல கட்சிகள் ஏன் ஆதரிக்கிறார்கள் என்பதும் ஏன் நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்பதும் எல்லோரும் அறிந்த விடயமே.
நாட்டைப் பொறுப்பேற்ற ரணில்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டினை பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாக்கி விட்டு பலரும் நாட்டில் இருந்து ஒதுங்கி இருந்த சூழ்நிலையில் ஒரு தனி ஆளாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த ரணில் மிகக் குறுகிய காலத்தில் நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு வந்தார்.
எனவே எதிர்வருகின்ற ஐந்து ஆண்டுக்கு அவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என வாக்களிப்பது ஒரு பொருட்டாக இருந்தாலும் கூட கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு வந்தார் என்பதற்காக தாய்நாட்டை நேசிக்கும் இலங்கையரான நாங்கள் அவருக்கு வாக்களிக்க கடமைப்பட்டு இருக்கிறோம்.
இது எமது தார்மீக கடமையாக இருக்கின்ற நிலையில்தான் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா
வடக்குக்குச் சென்று 13ஆவது சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக சொல்லி
இருக்கின்றார்.
கடந்த காலங்களில் ஜேவிபியினுடைய வழக்கின் அடிப்படையில் இப்போது வடக்கும் கிழக்கும் பிரிந்த மாகாணங்களாக இருக்கின்றது. அதேபோல 13வது சீர்திருத்தத்தில் உள்ளதைப் போல காணி, காவல்துறை அதிகாரத்தையும் தருவதாக அவர் வாக்குறுதி வழங்கியிருக்கிறார்.
13ஆம் சீர்திருத்தம்
இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டில் மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரத்தை கொடுக்கின்ற போது அதை எவ்வாறு சிறந்த முடிவாக பார்க்க முடியும். 13வது திருத்தம் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டால் சிக்கல் நிலை தான் வரும். இதை தாண்டி இலங்கை பல பாதுகாப்பு சவால்களை கடுமையாக பல்வேறு வழிகளிலும் சந்திக்கும் என்பது வெளிப்படை உண்மை.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் போன்ற சட்டமும், இலங்கை அரசியலும் நன்றாக தெரிந்தவர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்க முன்வந்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் 13ஆம் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவேன் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற சிங்கள மக்கள் அதிகம் வாழும் இலங்கையில் சாத்தியமாகுமா என்ற ஒரு கேள்வி பகிரங்கமாகவே இருக்கிறது.
மக்கள் வெள்ளம்
தமிழ் மக்களை பொறுத்த வரைக்கும் அவர்களுடைய உரிமையும் இல்லை, சலுகைகளும் இல்லை என்று நிலையில் இருக்கின்றபோது ஆக குறைந்தது டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் ராமநாதன், ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவம் செய்கின்ற விஜயகலா மகேஸ்வரன், மட்டக்களப்பில் இருக்கிற பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்கள் அரசிடமிருந்து தமக்கான அபிவிருத்திகளை பெற்று மக்களுக்கு சேவை செய்திருக்கின்றனர் என்பது ஆறுதலான விடயம். அதனை அவர்கள் புத்திசாலித்தனமான முன்னெடுப்புக்களினால் சாத்தியப்படுத்தினர்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்கள் சஜித் பிரேமதாசவோடு ஒப்பந்தம் செய்துள்ள போதிலும் என்ன வகையான ஒப்பந்தங்கள் செய்தார்கள் என்பது வெளிப்படுத்தப்படவில்லை.
ரணிலுடைய கூட்டத்திற்கு வடக்கு, கிழக்கு, மலையக பிரதேசங்களில் மக்கள் வெள்ளம் அதிகரித்திருக்கிறது. நாட்டை சிறப்பாக வழிநடத்த கூடிய ஜனாதிபதி ரணில் தான் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |