மைத்திரிக்கு வழங்கப்படவிருந்த உத்தியோகபூர்வ இல்லம்- தடை பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்!
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கு பெஜெட் வீதியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை நிரந்தரமாக வழங்குவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இடைநிறுத்தி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உச்ச நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ இல்லத்தை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவையின் தீர்மானத்தை எதிர்த்து மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோரால் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
மஹகம சேகர மாவத்தையில் முன்னாள் ரெச தலைவர் மைத்திரிபால சிறிசேன குடியமர்த்தப்பட்டுள்ள இல்லமானது பெரும் நிதிப் பெறுமதி உடையது எனவும் அது நாட்டுக்கு பெறுமதியான சொத்து எனவும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
அரச தலைவரின் பணிகளை மேற்கொள்ளாத முன்னாள் அரச தலைவரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இவ்வளவு நிதி மதிப்புடைய பொதுச் சொத்தை ஒதுக்கீடு செய்வது பகுத்தறிவற்றது, தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
